Tamilnadu

“ஊரடங்கு நேரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க அனுமதி” : அ.தி.மு.க அரசு அராஜகம் - வைகோ கண்டனம்!

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருப்பூரில் விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க அனுமதியளித்திருப்பதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அறப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் விளைநிலத்தைப் பாழாக்கும் உயர்மின் பாதை கோபுரங்கள் அமைத்ததைத் தடுத்து நிறுத்த அறப்போராட்டங்கள் நடத்தியபோது, எடப்பாடி பழனிச்சாமி அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கொங்குச் சீமை மக்கள் அடிபணியாமல் களத்தில் நின்று போராடி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்காமல், காவல்துறையை ஏவி அச்சுறுத்தி, உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை பவர் கிரீட் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்தபோது, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மக்களைத் திரட்டி பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜனவரி 21, 2020 அன்று பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

2013 ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டப்படி சந்தை மதிப்பில் நிலத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரிய விவசாயிகளின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு மீண்டும் ஜனவரி 28 இல் உயர் மின் பாதை பணிகளை தொடங்கியபோது, அதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களின் பெண்கள் தாலிக்கொடியை திருப்பூர் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஜனவரி 30, 2020 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கினர். அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகளை பரிசீலிக்கக்கூடச் செய்யாமல், மீண்டும் திட்டப் பணிகளை தொடங்கியபோது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பிப்ரவரி 29 ஆம் தேதி விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டது.

அதன் பின்னரும் தமிழக அரசு ‘கேளா காதினராக’ இருந்ததால் மார்ச் 10 ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என்று விவசாய சங்க கூட்டியக்கம் எச்சரித்தது.

பின்னர் உடனடியாக மார்ச் 9 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உயர்மின் கோபுரம் அமைத்திட கையகப்படுத்திடும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் தொகையை நிர்ணயித்து வழங்கும் பொறுப்பு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் நாடு முழுவதும் கொரோனா கொள்ளை நோய் மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறையச் செய்திடும் நிலையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு மத்திய அரசின் பவர்கிரீட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகத் தொற்று பரவி வரும் சூழலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பல்லடம் ஆகிய வட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு வட மாநிலத் தொழிலாளர்கள் நிலங்களுக்கு வந்தபோதுதான் மாவட்ட ஆட்சியர் அனுமதி ஆணை பற்றி தெரிய வந்திருக்கிறது.

சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடித்து, உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “உயிரைக் காக்கப் போராடும் மருத்துவர்களுக்கே இந்த நிலையா?” - மனிதம் மரித்துப்போய்விட்டதாக வைகோ வேதனை!