Tamilnadu

மருத்துவரின் உடலை மின்மயானத்தில் வீசிச் சென்ற ஊழியர்கள்: கொரோனா பாதிக்கப்பட்டவரா?- அம்பத்தூரில் பரபரப்பு!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஏப்ரல் 30தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களும் கொரோனா அச்சத்தால் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழந்ததால் அவரது உடலை கவச உடையணிந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அம்பத்தூர் மின்மயானத்தில் வீசிவிட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் லட்சுமி நாரயணன் ரெட்டி. இவர் காய்ச்சல் காரணமாக வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அம்பத்தூர் அயப்பாக்கம் சாலையில் உள்ள மின் மயானத்தில் மருத்துவமனை ஊழியர்கள் கவச உடையை அணிந்து கொண்டு வந்து மயானத்தின் உள்ளே வைத்துள்ளனர்.

மயான ஊழியர்கள் அச்சத்தால் உடலை எரிக்கமாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் வாக்குவதம் ஏற்பட ஒருகட்டத்தில் மருத்துவமனை ஊழியர்கள் உடலை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மின்மயானத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் மின்மயான ஊழியர்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கும், மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும், உயிரிழந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா என குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும் குடும்பத்தினர் இல்லாமல் ஏன் மருத்துவமனை ஊழியர்கள் உடலை எரிக்க முயன்றனர் என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவமனை ஊழியர்கள் மூலமே மீண்டும் மருத்துவமனைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Also Read: “கொரோனா காலத்திலும் தீண்டாமை கொடுமை” - பட்டியலினப் பெண் சமைத்த உணவை உண்ண மறுத்த நோயாளிகள்!