Tamilnadu

“ஊரடங்கால் உணவு தர யாருமில்லை” - பட்டினி கிடந்து உயிரிழந்த முதியவர் - அதிர்ச்சி தகவல்! #CoronaLockdown

மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி பஸ் ஸ்டாப்பில் தங்கியிருந்த முதியவர் பட்டினியால் உயிரிழந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் பயணம் செய்பவர்கள் தரும் உணவைச் சாப்பிட்டு அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு உணவளிக்க யாரும் வராத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உணவின்றி வாடி, பசியால் மயங்கிய நிலையில் இன்று மாலை அந்த முதியவர் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து திருப்புவனம் போலிஸார் உடலை கைப்பற்றி, பட்டினியால் இறந்தவர் பற்றி விசாரித்து வருகின்றனர்.

ஒருபக்கம் ஆதரவற்றோருக்கு நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவிக்கிறது. மறுபுறம் இதுபோல ஊரடங்கால் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. அரசு விரைந்து செயல்பட்டு இதுபோன்ற ஆதரவற்றோரைக் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்ததால் 3 வயது குழந்தை உயிரிழப்பு”: சாலையில் குழந்தையை தூக்கிச் சென்ற தாய்! (Video)