Tamilnadu

“கொரோனா பாதிப்பு 969ஆக உயர்வு; ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிப்பதை பின்பற்றுவோம்”- தலைமை செயலாளர் பேட்டி!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பின்பற்றப்படும் சூழலில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இன்று பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் தமிழக முதல்வர் பழனிசாமி. இந்நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம்.

அப்போது அவர் பேசியதாவது :

“தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று தமிழகம் பின்பற்றும்.

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இதுவரை வந்து சேரவில்லை. கொரோனா தொற்றை ஆய்வு செய்யும் பிசிஆர் கருவிகள் தற்போது போதுமான அளவு உள்ளது.

அதனால், தமிழகத்தில் தடையின்றி பரிசோதனைகள் நடக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை 9,527 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 29,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனாவை தடுக்க கைகோர்த்த பெரும் போட்டியாளர்கள்... ஒன்றிணைந்த ஆப்பிள் கூகுள் ! #Covid19