Tamilnadu

கொரோனா பாதிப்பு: ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் - திருமாவளவன் எம்.பி கோரிக்கை!

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன்.

இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,“கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

அதேவேளையில், மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம், கையுறை மற்றும் முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர ஊர்தி ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள், அவசர அழைப்பு மைய ஊழியர்கள் என 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில், ஊழியர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். போதிய ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு போன்றவை இல்லாத சூழ்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது இந்நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதாகும்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கும் சூழலில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நோயாளிகள் அனைவருமே 108 ஆம்புலன்ஸின் மூலம் மட்டுமே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் இவர்களின் பணிச்சுமை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் துணிச்சலோடு இரவு பகல் பாராமல் பணியாற்றும் இவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமையாகும்.

புயல், வெள்ளம், இயற்கைப் பேரிடர் என நெருக்கடிகள் மிகுந்த சூழல்களில் மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் அவர்களை அங்கீகரிப்பதும் பாதுகாப்பதும் தமிழக அரசின் கடமை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.”

Also Read: “கொரோனா மருத்துவ சோதனையை தாமதப்படுத்துவது ஏன்?”: பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் அடுக்கடுக்கான கேள்விகள்!