Tamilnadu

“பொதுத்தேர்வுகள் நடத்தமுடிவு? - கொரோனா அச்சுறுத்தலை அலட்சியப்படுத்தும் அதிமுக அரசு”: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 370க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த நோய் பரவ தொடங்கியுள்ளது. தற்போது 7 பேருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்த 75 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து சேவைகளையும் முடக்கி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும் தமிழக அரசு 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதுமாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அரசின் இத்தகைய அனுகு முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தமுடிவு செய்திருப்பது கொரோனா அச்சுறுத்தலை அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தியில் வெளியிட்டுள்ள பதிவில்,“11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்திருப்பது கொரோனா அச்சுறுத்தலை அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்துகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சி.பி.எஸ்.இ உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்புடன் அ.தி.மு.க அரசு விபரீத விளையாட்டு நடத்துவது கவலைக்குரியது மட்டுமின்றி கடும் கண்டனத்திற்கும் உரியது. ஆகவே மாணவர்கள் நலன் கருதி 11, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உறுதி செய்ய வேண்டும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!