Tamilnadu

மாற்று மருத்துவம் என்ற பெயரில் கொரோனா குறித்து வதந்திகளைப் பரப்பி வந்த ஹீலர் பாஸ்கர் கைது!

கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்று மருத்துவம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியலுக்கு எதிரான வகையில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்தார் ஹீலர் பாஸ்கர்.

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம்; அலோபதி மருந்துகள் ஆபத்தானவை என்கிற ரீதியிலான கருத்துகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரப்பி வந்த ஹீலர் பாஸ்கர், கொரோனா வைரஸ் தொடர்பாகவும் பல்வேறு வதந்திகளைப் பரப்பி வந்தார்.

கொரோனா வைரஸ் தொற்று என்பது இலுமினாட்டிகள் செய்த சதி என்றும், மனிதர்களை கொரோனா அறிகுறி இருப்பதாகச் சொல்லி மருத்துவர்கள் ஊசி போட்டுக் கொன்று விடுவார்கள் என்றும் அச்சமூட்டும் வகையிலான கருத்துகளைப் பேசி காணொளியும் வெளியிட்டிருந்தார்.

அந்தக் காணொளி மக்கள் மத்தியில் பரவி, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மக்களின் உயிரோடு விளையாடும் ஹீலர் பாஸ்கரை கைது செய்யவேண்டும் என மருத்துவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தி பரப்பியதற்காக ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில், ஹீலர் பாஸ்கர் மீது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.

Also Read: கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்பு : மார்ச் 22ம் தேதி 7 மணி முதல் தமிழகம் முழுவதும் பால் விநியோகம் இல்லை!