Tamilnadu

“இருமல் சத்தம் அமைதியை கெடுக்கிறது” : கொரோனா காலர் டியூனுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் இதுவரை 60க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக மொபைல் அழைப்புகளின்போது, இருமல் சத்துடன் தொடங்கும் விழிப்புணர்வு ஆங்கில விளம்பரத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மத்திய சுகாதாரத்துறை விளம்பரப்படுத்தி வருகிறது.

இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்குத் தள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த விளம்பரம் எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் காலர் ட்யூனாக பயன்படுத்துவது மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Also Read: கொரோனா பீதி : விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸாவதில் சிக்கல்? - ரசிகர்கள் அதிர்ச்சி!