Tamilnadu

“திராவிட கருவூலமான பேராசிரியரின் மறைவு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பு” : முத்தரசன் உருக்கம்!

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் இன்று (07.03.2020) அதிகாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கிடைத்தது. கடந்த சில மாதங்களாக பேராசிரியரின் உடல்நிலை பலவீனப்பட்டிருந்தாலும், அவர் பரிபூரண குணமடைந்து திரும்புவார் என எதிர்பார்த்தோம்.

சுயமரியாதை சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் சிறுவயது முதலே திராவிட இயக்கத்தில் அமைப்புரீதியான பொது வாழ்வை மேற்கொண்டவர். அண்ணாமலைப் பல்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, சட்டப்பேரவை முன்னவராக, அமைச்சராக பணிபுரிந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றி வந்தவர்.

தமிழர் வாழ்வு, தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு என பல்வேறு துறைகளை ஆழ்ந்து கற்று, பல படைப்புகளை தந்துள்ளவர். காலஞ்சென்ற தலைவர் கலைஞர் அவர்களுடன் மாறாத நட்புக் கொண்டவர். சமூக நீதி சார்ந்த ஜனநாயக நெறி சார்ந்து வாழ்ந்தவர்.

வகுப்புவாத சக்திகளை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் திராவிட இயக்கத்தின் கருத்து கருவூலமான பேராசிரியரின் மறைவு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இருப்பினும் அவரது வாழ்வும், பணியும் நமது போராட்டத்தை வழிநடத்த உதவிடும் என நம்புகிறோம்.

பேராசிரியர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க கழகத் தலைவர் உள்ளிட்ட கழக நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: #LIVE UPDATES : தி.மு.க பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் காலமானார்!