Tamilnadu

“வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் கொடு” : கையும் களவுமாக சிக்கிய திருவண்ணாமலை சப்-இன்ஸ்பெக்டர்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் உடைமைகள் பாதுகாப்பகம் நடத்தி வருபவர் கிருஷ்ணவேணி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கடையில் இருக்கும்போது சென்னையைச் சேர்ந்த ஒருவர் தனது லேப்டாப் பையை வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், சிலமணி நேரத்தில் தனது பையைத் திரும்ப வாங்கியுள்ளார். அப்போது அந்தப் பையில் இருந்த லேப்டாப்பை காணவில்லை. மேலும் பையில் வேறு ஒருவரின் உடைமைகள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் கிருஷ்ணவேணியிடம் இதுகுறித்துக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாரிடம் இதுதொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் கிருஷ்ணவேணியை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே இளைஞரிடம் முழுமையாக விசாரித்துவிட்டு “உங்கள் லேப்டாப்பை பெற்றுத் தருகிறோம். இப்போது ஊருக்குச் செல்லுங்கள். கிடைத்ததும் போன் செய்கிறோம்” எனக் கூறி இளைஞரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்போவதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன் மற்றும் அன்பழகன் இருவரும் கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணவேணிக்கு ஆதரவாக அவரது மருமகன் அசோகன் போலிஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் 25,000 ரூபாய் தரவேண்டும் இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். சிறைக்குச் செல்லவேண்டும் என்ற அச்சத்தில் அந்த பணத்தைக் கொடுப்பதாக அசோகன் ஒப்புக்கொண்டு முதல் தவணையாக 15,000 மட்டும் கொடுத்துள்ளார்.

மீதமுள்ள 10,000 ரூபாயை பிறகு தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த தொகையைக் கொடுக்க காலதாமதம் ஆனதால் அடிக்கடி போன் செய்து அசோகனுக்கு இளஞ்செழியனும், அன்பழகனும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அசோகன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலிஸார் அளித்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை இளஞ்செழியன் மற்றும் அன்பழகனிடம் கொடுத்துள்ளார். அப்போது தலைமறைவாக இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலிஸார் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தவும் கோரியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இராணுவ அதிகாரி எனக் கூறி OLX மூலம் பல கோடி மோசடி : தீரன் பாணியில் மோசடி கும்பலை கைது செய்த போலிஸ்! #Crime