Tamilnadu

"முன்னாள் அ.தி.மு.க எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை” - லஞ்ச வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரை ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க உறுப்பினராக இருந்த கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.

அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடன் பெற ராமசந்திரன் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, அறக்கட்டளையிடமிருந்து தானும் குடும்பத்தாரும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணம் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன், அறக்கட்டளை ஆகியோர் மீது 2015ம் ஆண்டில் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் விசாரித்தார்.

அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி லிங்கேஸ்வரன் வங்கி மேலாளர் தியாகராஜன், ராஜசேகரன், முன்னாள் அ.தி.மு.க எம்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

லஞ்ச வழக்கில் குற்றவாளிகளான அதி.மு.க முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு 7 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதி.மு.க முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரனுக்கு ரூபாய் 1.11 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

Also Read: “பத்திரிகையாளரை தாக்கிய ஆணவ அமைச்சர் மீது கடும் நடவடிக்கை தேவை!” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!