Tamilnadu

விபரீதமான ‘டிக்டாக்’ விளையாட்டு... போலிஸிடம் வாலாட்டி சிறைக்குச் சென்ற வாலிபர்!

சமூக வலைதளங்களில் ஒன்றான ‘டிக்டாக்’ செயலி பொழுதுபோக்குக்கான அம்சமாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் அவற்றால் இளைஞர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். டிக்டாக்கில் சுலபமாக பிரபலமடைவதால் அதில் வீடியோக்களை பகிர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாய மனநிலைக்கு உள்ளாகி பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றி திறமையை மட்டும் வெளிப்படுத்திக்கொள்ளாமல், அநாவசியமான குற்றச்செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், அண்மைக்காலமாக டிக்டாக் மூலம் குற்றச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து வருவதால் காவல்துறையினர் அதனைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், சென்னையை அடுத்த பெருங்களத்தூரில், உள்ள காவல் நிலையத்தை குறிப்பிட்டு, கத்தியைக் காட்டி மிரட்டும் தொனியில் வாலிபர்கள் இருவர் கானா பாடல் பாடி டிக்-டாக் வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.

இதனை கண்காணித்த காவல்துறையினர் அவ்விருவரையும் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒருவர் பெருங்களத்தூர் வேல்நகரைச் சேர்ந்த கோவிந்தன் (19). மற்றவர் 16 வயதாகும் சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிஸார் அவனை புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

அதேபோல, கோவிந்தனுக்கு உடந்தையாக இருந்த அந்த 16 வயது சிறுவனையும் செங்கல்பட்டில் உள்ள சிறுவர்கள் சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

விளையாட்டு என நினைத்து இளைஞர்கள், சிறார்கள் பொறுப்புணர்வே இல்லாமல் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாலேயே இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Also Read: போலிஸ் வாகனத்தில் ஏறி ‘டிக்டாக்’ வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு தூத்துக்குடி காவல்துறை கொடுத்த தண்டனை!