Tamilnadu
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் 50% உயருகிறதா? - AICTE பரிந்துரையால் மாணவர்கள் அதிர்ச்சி!
2020 - 2021-ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை உயர்த்துமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், பொறியியல் படிப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்தவும், பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஆறாவது மற்றும் ஏழாவது சம்பள கமிஷனின் ஆணைகளை பரிசீலிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிப் படிப்புகளுக்கு மாநில கட்டண நிர்ணய கமிட்டி தான் இதுவரை கட்டணம் நிர்ணயம் செய்து வருகிறது. கடைசியாக 2017-18ம் ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.
தமிழகத்தில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக்கு ரூ.55 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ரூ.90 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைப்படி, பொறியியல் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூபாய் 1.44 லட்சம் முதல் ரூபாய் 1.58 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கலாம் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே சம்பள கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பரிந்துரை செய்துள்ளது.
இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை 50% அளவிற்கு உயர்த்த பல கல்லூரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அடுத்தாண்டு முதல் வெகுவாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகள் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வரும் நிலையில், மாணவர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இந்நிலையில், கட்டணத்தை அதிகரிப்பதால் பொறியியல் சேர்க்கை வெகுவாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.
மேலும், நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் பொறியியல் கட்டண உயர்வு குறித்து வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!