Tamilnadu

புகார் அளிக்கவந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட போலிஸ் : வீட்டுக்குள் வைத்து தாழிட்ட ஊர்மக்கள்

திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகில் உள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

குழந்தை இல்லாததால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் வேலை கிடைத்துள்ளதாக சாந்தியின் கணவர் வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார்.

சென்னைக்குச் சென்ற கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், கணவரைக் காணவில்லை எனவும், கண்டுபிடித்துக் கொடுக்கும்படியும் புலிவலம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் கொடுத்துள்ளார். சாந்தியின் புகாரைப் பெற்றுக்கொண்ட தலைமைக் காவலர் ராமர் புகார் குறித்து விசாரணை நடத்துவதாக அடிக்கடி சாந்திக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இப்படியாகப் பேச ஆரம்பித்த ராமர் ஒருகட்டத்தில் சாந்தியின் வீட்டிற்குச் சென்று பேசிப் பழக ஆரம்பித்துள்ளார். பகல் நேரத்தில் வந்த ராமர், இரவு நேரத்திலும் சாந்தியின் வீட்டிற்கு வந்ததைக் கண்டு அதிர்ந்து போன கிராம மக்கள் ராமர் மீது நடவடிக்கை எடுக்க காத்தக்கிடந்தனர்.

இதனிடையே, நேற்றைய தினம் வழக்கம்போல சாந்தியின் வீட்டுக்கு காவலர் ராமர் வந்துள்ளார். ராமர் சாந்தியின் வீட்டிற்குள் சென்ற பிறகு அவர்களுக்கு தெரியாமல் கிராம மக்கள் வெளிப்பக்கம் தாழிட்டு, போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புலிவலம் போலிஸார் சாந்தியின் வீட்டுக் கதவைத் தட்டி வெளியே அழைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமரும், சாந்தியும் முகத்தை மூடியபடி வெளியே வந்துள்ளனர். பொதுமக்களில் சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுப்பதை பார்த்த ராமர் கோபத்தில் பொதுமக்களைத் திட்டியுள்ளார். பின்னர் போலிஸார் அங்கிருந்து ராமரை அழைத்துச் சென்றனர்.

ஊர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரிடமும் போலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமர்தான் பெண்ணை ஏமாற்றியது தெரிவந்தது. இதனையடுத்து பெண்ணின் உறவினரை வரவழைத்து சாந்தியை அவர்களிடம் போலிஸார் ஒப்படைந்தனர்.

மேலும் அதிகாரத்தை பயன்படுத்தி, புகார் கொடுக்கவந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காக காவலர் ராமர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ஆயுதப்படைக்கு மாற்றியும் திருச்சி டி.எஸ்.பி கோகிலா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போலிஸார் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் சக பெண் போலிஸாருக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்து நடவடிக்கைக்கு உள்ளான நிலையில் காவலர் ராமரின் இந்த செயல் பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஃபைன் வேண்டாம் ஜூஸ் வாங்கிக்கொடு” : வாகன ஓட்டிகளிடம் நூதன முறையில் வசூல் செய்யும் போலிஸ்!