Tamilnadu
மரடு குடியிருப்பு எதிரொலி: முட்டுக்காட்டில் விதிகளை மீறி கட்டப்பட்ட பங்களாவை இடிக்க ஐகோர்ட் உத்தரவு!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதில், முட்டுக்காடு பகுதியில் உள்ள சொகுசு பங்களாக்கள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், முட்டுக்காடு படகு குழாம் அருகே உள்ள கடற்கரையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், கடலோர ஒழங்குமுறை மண்டல அதிகாரிகளும் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில், கட்டுமானங்கள் கட்டத் தடைசெய்யப்பட்ட பகுதியில் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பங்களாக்கள் அப்புறப்படுத்த வேண்டியவை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கேரள மாநிலம் மரடுவில் கடலோர ஒழங்குமுறை மண்டல விதிகளை பின்பற்றாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டதை சுட்டிகாட்டிய நீதிபதிகள், முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி சர்வே எண் 114-ல் கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாக்களின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பங்களா இடிக்கப்பட வேண்டும் என்றும் இதற்கான செலவை அந்த சொகுசு பங்களாவின் உரிமையாளர் ஏற்று கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்