Tamilnadu

மருதாணி மூலம் CAA-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மணமகள் : சுயமரியாதை இணையேற்பு விழாவில் நெகிழ்ச்சி!

இந்திய மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, மதுரையைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது, “NO CAA, NO NRC” என கைகளில் மருதாணியால் அலங்கரித்துக்கொண்ட நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் யாழினிக்கும், தஞ்சை கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் ஜெயன்நாதனுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா மதுரை ஐராவதநல்லூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுயமரியாதை இணையேற்பு உறுதியேற்றுக்கொண்டு இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த விழாவை திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்திப் பேசினார்.

யாழினி - ஜெயன்நாதன்

அவரைத் தொடர்ந்து தருமபுரி எம்.பி. செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் துணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

இந்த நிகழ்வில் சமூகவலைதளங்களின் வழியாக இணைந்த நண்பர்களும், திராவிட இயக்கங்களைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். அப்படி நடைபெற்ற இணையேற்பு விழா சமூக வலைதளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்றதற்கு மணப்பெண்ணின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கையில் மருதாணி வைத்துக்கொள்வது அழகிற்காக மட்டுமின்றி, பிரித்தாள முற்சிக்கும் மோடி அரசின் குடியுரிமைச் சட்ட நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை பதவி செய்யும் விதமாகவும் இருக்கவேண்டும் என எண்ணிய மருத்தவர் யாழினி, தனது கையில் ‘மெஹந்தி’ மருதாணி அலங்காரத்துடன் “NO CAA, NO NRC” என எழுதிக்கொண்டார்.

இதனை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இணையேற்பு நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் பொன்மொழிகள் அடங்கிய எனும் குறுநூல் வழங்கப்பட்டதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: CAA ஆதரவு பேரணியில் வன்முறை : தடுக்க முயன்ற பெண் துணை ஆட்சியர் மீது பா.ஜ.கவினர் தாக்குதல் முயற்சி! Video