Tamilnadu
“இவர்கள் எல்லாம் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை?” : அம்பலப்படுத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி !
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
கடந்த காலங்களிலேயே கவிழவேண்டிய அ.தி.மு.க ஆட்சி மோடி அரசின் தயவால் தற்போது வரை நீடித்துவருகிறது. அதனால் அதற்கான விசுவாசத்தை அ.தி.மு.க அரசும் அதன் அமைச்சர்களும் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, மோடி அரசின் மோசமான திட்டங்களை தமிழக மக்கள் எதிர்த்தால், அ.தி.மு.க-வினர் மோடி அரசின் திட்டங்களை ஆதரித்து பொய் பிரச்சாரங்களிலும் ஈடுபடத் துவங்குவார்கள். அதேபோல் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுபவர்களையும், விமர்சிப்பவர்களையும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை விட ஒருபடி மேலே சென்று ஒடுக்கும் வேலையை அ.தி.மு.க அரசு செய்து வருகிறது.
சமீபத்தில் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தை சகித்துக்கொள்ளமுடியாத பா.ஜ.க-வினர் அ.தி.மு.க அரசை தங்கள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு போராடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, கைது செய்வது என தங்களின் வன்மத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
அதன்படி சமீபத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அதற்கு வலுவான கண்டனங்கள் எழுந்து வருகிறது. நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பற்றி பேசியதால் இந்த நடவடிக்கை என்று கூறும் அ.தி.மு.க அரசு, வன்முறையை தூண்டும் விதமாகப் பேசும், பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், மோசமான முறையிலும் கருத்து தெரிவித்த நபர்கள் கைது செய்யாததைப் பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி பரஞ்சோதி.
அதில், “சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் - ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன ‘துக்ளக்’ குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை.
காவல்துறையினரிடமே ‘ஐகோர்ட்’ குறித்து கீழ்த்தரமான வகையில் பேசிய எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
பெண் பத்திரிகையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதனமுறையை நியாயப்படுத்தியும், நாயையும் மனிதர்களையும் இணைத்து சாதி வெறியோடு கருத்துச் சொன்ன வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ‘செருப்பால் அடிக்கவேண்டும்’ என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.
சமீபத்தில் மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.
இவர்கள் அனைவரும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் தொடர்பில் உள்ளவர்கள். அதேசமயம் கல்யாணராமன் போன்றவர்களை மட்டும் இலகுவாக கைது செய்யும் அரசு ஒரு குறிப்பிட்ட உயர்சாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்களில் ஒருவரைக் கூட கைது செய்யமுடியவில்லை. அவர்கள் மீது குற்றம் இருப்பது தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.
இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாக தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் அப்பாவி மக்கள்” எனத் தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி பரஞ்சோதி.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !