Tamilnadu
“தமிழக சட்டப்பேரவையில் CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். இந்தத் தீர்மானத்துக்கு சட்டமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆதரவு தெரிவித்தது. அதனையடுத்து இந்தத் தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கேரள சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்திலும் CAA-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, சமூகவலைதளத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கேரள சட்டமன்றப் பேரவையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகுந்த மன மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பணியை ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் என்பது நாட்டு மக்களின் பெருவிருப்பமாக இருக்கிறது.
ஆகவே வருகின்ற ஜனவரி 6ம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில், இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளி அன்று இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் : மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
-
RSS நிகழ்ச்சிகளுக்கு தடை? : தமிழ்நாட்டை பின்பற்ற தொடங்கிய கர்நாடகா - அமைச்சருக்கு மிரட்டல்!