Tamilnadu
இலவச வேட்டி சேலை நூல் கொள்முதலில் ரூ. 21 கோடி முறைகேடு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
இலவச வேட்டி சேலை திட்டத்தில் ரூ.21 கோடியே 31 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாகவும் கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.
இதில் ஒரு சேலைக்கு, 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், 21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளைக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்ய முடிகிறது எனவும் இதனால் எங்கள் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு ரூபாய் 21.31 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!