file image
Tamilnadu

அரசுக்கு கணக்கு காட்டாமல் நூதன முறையில் கொள்ளையடிக்கும் டிராஃபிக் போலிஸ் - மதுரவாயலில் அதிர்ச்சி சம்பவம்!

போக்குவரத்து போலிஸார் வாகன சோதனையின்போது, லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களை தவிர்க்கவும், வாகன ஓட்டிகளிடம் நியாயமான முறையில் அபராதம் விதிப்பதை உறுதி செய்யவும், Cashless அபராத விதிப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னைக்குள் வந்து செல்லும் எந்த ஊர் லாரியாக இருந்தாலும், மதுரவாயல் போக்குவரத்து காவல்துறைக்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் லஞ்சம் அளித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக தொடர்வதாக லாரி உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பின் நிர்வாகி கணேஷ் குமாருக்கு சொந்தமான லாரி, கடந்த 20ம் தேதி மதுரவாயலைக் கடந்தபோது வழிமறித்த எஸ்.ஐ கொளஞ்சியப்பன் என்பவர், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த நிலையிலும் 200 ரூபாய் அபராதம் செலுத்த வற்புறுத்தியுள்ளார்.

லாரி ஓட்டுனர் கார்டு மூலமாக பணம் செலுத்த முயன்றபோது, கார்டு மூலமாக செலுத்தினால் 300 ரூபாய், பணமாக கொடுத்தால் 200 ரூபாய் எனத் தெரிவித்து, 200 ரூபாயைப் பெற்றுக்கொண்டு 100 ரூபாய்கான அபராத ரசீது கொடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, அது மாநகர போலிஸூக்கு என சமாளித்து அனுப்பியுள்ளார்.

file image

அதேநேரத்தில், மதுரவாயல் போக்குவரத்து காவல் எஸ்.ஐ 100 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், அந்தத் தொகை நிலுவையில் இருப்பதாகவும் லாரி உரிமையாளர் கணேஷ் குமாருக்கு குறுந்தகவல் வந்துள்ளது. ஓட்டுனரிடம் விசாரித்தபோது, 200 ரூபாய் வாங்கிக் கொண்டு 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்ததாக தெரிவிக்க, அந்த அபராத ரசீதை சரிபார்த்த போது அதில் 100 ரூபாய் அபராத தொகை செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்தது.

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த நிலையிலும் 200 ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு கூடுதலாக 100 ரூபாய் அபராத தொகை நிலுவையில் இருப்பதாக காட்டி, வசூலாகும் தொகையை அரசுக்கு செலுத்தாமல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒவ்வொரு லாரிக்கும் 200 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வரை மதுரவாயல் போக்குவரத்து காவல்துறையினர் சுருட்டிச் செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது. லஞ்சம் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: கழிவுநீர் இணைப்பிற்கு லஞ்சம் கேட்ட பெண் பொறியாளர் : பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலிஸார்!