Tamilnadu

CAA Protest: டிசம்பர் 26ல் பட்டினிப் போராட்டம் - குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு!

பா.ஜ.க கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள், கல்லூரி மாணவர்கள், மாநில முதலமைச்சர்கள் என பலரும் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அண்மையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலிஸார் நடத்திய தாக்குதல் நாடெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை கோபத்திற்குள்ளாக்கியது. அதனையடுத்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

டிசம்பர் 13, 17 ஆகிய நாட்களில் தமிழகம் முழுக்க தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 54 அமைப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, நடிகர் சித்தார்த் மற்றும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 600 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், ஓவியர்கள் மற்றும் களச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து வரும் டிசம்பர் 26ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மலை 6 மணி வரை சென்னை அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

Also Read: “ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்” - மாபெரும் பேரணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!