Tamilnadu
#CAAProtest : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப் பதிவு!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
மேலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் நேற்றைய தினம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக முகமது கலாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி காவல்துறை எச்சரித்தும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 54 அமைப்புகளைச் சேர்ந்த 600 பேர் மீது 143 மற்றும் 416 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எந்த அசம்பாவித சம்பவமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக 600 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு ஜனநாயக அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!