Tamilnadu

#CAA : விடிய விடிய போராட்டம் நடத்திய மாணவர்கள்... பரபரப்பில் சென்னை பல்கலைக்கழகம்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலிஸார் வன்முறை வெறியாட்டம் நடத்தியது நாடு முழுவதும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், தாக்குதல் நடத்திய போலிஸாரை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தையடுத்து, சென்னை பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விடுமுறை என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

மேலும் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் டிசம்பர் 23 வரை நடைபெறவிருந்த வகுப்புகள், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்த போதிலும், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் 100க்கும் மேற்பட்ட போலிஸா நேற்றிரவு நுழைந்தனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று இரவு முழுக்க மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய நிலையில் இன்று காலையிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Also Read: “பா.ஜ.க காலால் இட்ட பணிகளை தலையால் செய்யும் ஆட்சி எடப்பாடி ஆட்சி” - காஞ்சியில் முழங்கிய மு.க.ஸ்டாலின்!