Tamilnadu

தொடரும் கந்துவட்டி கொடுமை : குடியிருந்த வீட்டை இடித்துத் தள்ளிய கந்துவட்டி கும்பல் அராஜகம்!

மதுரை மாவட்டம் தத்தநேரி பகுதியைச சேர்ந்த குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014-ம் ஆண்டு கடனாக 2,00,000 ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 3,00,000 செலுத்திய குமாரை நாகராஜ் வலியுறுத்தினார்.

மேலும், 5 சதவீத வட்டி என்ற அளவில் மாதந்தோறும் வட்டியை செலுத்தியுள்ளார். இந்நிலையில் வட்டி மட்டுமே கட்டிய குமாரால் ஒருகட்டத்தில் கடனை செலுத்த முடியவில்லை என நாகராஜிடம் கூறியுள்ளார். அதனால் கொடுத்த கடனுக்கு குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு நாகராஜ் கேட்டுள்ளார். அதற்காக தொடர்ந்து நாகராஜ் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி குமார் வெளியூர் சென்றிருந்தார். மதிய நேரத்தில் குமாரின் மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது அங்கு நாகராஜ் தனது ஆட்களுடன் வந்து, குமாரின் வீட்டை இடித்துள்ளார்.

இதைப்பார்த்து ஆதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நாகராஜிடம் கேட்கும்போது, தன் நீதிமன்ற சென்று வீடு தனக்கு கிடைத்தகாக தீர்ப்பு பெற்றதாகவும், தன்னிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி வீடு முழுவதையும் இடித்துள்ளார். இதனையடுத்து குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு குமார் வருவதற்குள் வீட்டின் முன்பகுதி முழுவதும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார்.

இதனையடுத்து குமாரின் புகாரை தத்தநேரி போலிஸார் பெற்றுக்கொள்ளாததால், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை நேரில் சந்தித்து குமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் போலிஸார் கந்துவட்டிக்காரர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்தாண்டு திருநெல்வேலியில் கந்துவட்டி பிரச்சனையால் இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கந்துவட்டி தலைதூக்க அரம்பித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்: கர்நாடகாவில் கந்துவட்டி கும்பல் அராஜகம்!