Tamilnadu

ச்சீ.. ச்சீ.. இந்த வெங்காயம் சரியில்லை : எகிப்து வெங்காயத்தை தவிர்க்கும் மக்கள்.. கலக்கத்தில் வியாபாரிகள்

கடந்த ஒருமாத காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் வெங்காயப் பயிர்கள் அழிந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது தான் காரணம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 40,000 டன் வெங்காயம் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எகிப்து வெங்காயம் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு வந்திறங்கியது. இந்நிலையில், எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்களை வாங்க மக்கள் மறுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

நாட்டு வெங்காயத்தைவிட எகிப்து வெங்காயம் தரத்தில் குறைவாகவும், அதிக அளவு காரத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. மேலும், எகிப்து வெங்காயம் அளவில் பெரியதாக உள்ளது.

இந்த வெங்காயம் ஒரு கிலோவுக்கு 5 முதல் 6 வெங்காயம் மட்டுமே இருக்கிறது. மேலும், எகிப்து வெங்காயத்தின் நிறம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது.

எனவே இதனை வாங்க பொதுமக்கள் விரும்பவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதனை மக்கள் வாங்க மறுப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read: ‘’எனக்கு எப்படி வெங்காய விலை தெரியும்’’ : தொடரும் பா.ஜ.க அமைச்சர்களின் ஆணவப் பேச்சு!