Tamilnadu

“ஒரு நாள் திருடலைன்னாலும் தூக்கம் வராது சார்” - திருடனின் வாக்குமூலத்தால் சேலம் போலிஸார் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி, சூரமங்கலம், இரும்பாலை, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் தலைமையில் உதவி ஆணையர், போலிஸ் ஆய்வாளர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, இரவு நேரங்களில் தனிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சூரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், பிடிபட்ட நபர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் இருந்து வெளிவந்துள்ளார் என்றும் அந்த நபரின் பெயர் அய்யந்துரை (48) என்றும் தெரியவந்தது. மேலும், விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது, சிறையில் இருந்து வெளிவந்த அய்யந்துரை கடந்த 40 நாட்களாக சூரமங்கலம், இரும்பாலை ராசி நகர், ஜாகீர் அம்மாபாளையம், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

பகல் நேரம் முழுவதையும் பேருந்தில் பயணித்து தூங்கிக் கழித்துவிட்டு இரவில் தனது கைவசத்தை காட்டியுள்ளார் அய்யந்துரை. மேலும், 1990ம் ஆண்டில் இருந்து திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த கில்லாடி திருடனிடம் இருந்து கடந்த 40 நாட்களில் திருடப்பட்ட 10 சவரன் நகைகள், 6 இருசக்கர வாகனங்கள், 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு முருகன் சிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து பேசிய அந்த ‘பலே’ திருடன் அய்யந்துரை தான் ஒரு நாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது என கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, திருடன் அய்யந்துரையிடம் இருந்து மீட்கப்பட்ட முருகன் சிலை வெண்கலமா இல்லையா என்பது குறித்து ஆராய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் போலிஸ் தரப்பு கூறியுள்ளது. மேலும், காவல்துறை பிடியில் உள்ள அய்யந்துரையை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.