Tamilnadu

“உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு என்ன வேலை?” - தி.மு.க மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயற்சி அளிப்பதை கண்டித்து தி.மு.க மாணவர் அணி சார்பில் மத்தியகைலாஷ் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

இதுகுறித்து, “உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிப்பதற்கான தேவை என்ன இருக்கிறது? அதற்காக தமிழ் வளர்ச்சித் துறை நிதி ஒதுக்குவது என்பது அவமானம்” எனத் தெரிவித்தார் எழிலரசன் எம்.எல்.ஏ.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட தி.மு.க மாணவர் அணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு மைலாப்பூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, தயாநிதி மாறன் எம்.பி., ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

பின்னர், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ மற்றும் தயாநிதி மாறன் எம்.பி., ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஜெ.அன்பழகன் பேசும்போது, “தமிழ்நாட்டில் மதவாத ஆட்சி என்பதற்கு சாட்சியாக தற்போது ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்தான் கற்பிக்கவேண்டும். இந்தி கற்பிக்கலாம் என்று கூறுவது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசை குளிர்விக்க வேண்டும்; இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக மாநில அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அரசின் இதுபோன்ற செயல்கள் தொடருமானால் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

தயாநிதிமாறன் எம்.பி., பேசுகையில், “1960ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது தமிழ் ஆராய்ச்சி மையம். தமிழ் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து உலகம் முழுவதும் தமிழைப் பரப்பவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த தமிழாராய்ச்சி நிறுவனம்.

அ.தி.மு.க அரசாங்கம் தமிழுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தமிழ் தான் படிக்கவேண்டும்; வேறு மொழி படிக்கவேண்டும் என்றால் வேறு எங்காவது செல்லலாம். தி.மு.க எப்போதும் தமிழுக்காக குரல் கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “தமிழ் ‘அழிப்புத் துறை’யாகவே மாறிவிட்டதா தமிழ் வளர்ச்சித்துறை?” - அமைச்சருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!