Tamilnadu

மேட்டுப்பாளையம் விபத்து : சுவர் சரிந்து பலியான இரண்டு குழந்தைகளின் கண்களைத் தானமாக கொடுத்த தந்தை !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் ஏ.டி காலனி பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் இவர் அப்பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று அதிகாலை பெய்த கன மழையால் இவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து, அருகிலிருந்த வீடுகள் மீது விழுந்ததில், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலரின் மகள் நிவேதா மற்றும் மகன் ரங்கநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். செல்வராஜின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டதால், செல்வராஜின் குழந்தைகள் சித்தியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர்.

செல்வராஜின் வீடு சுவர் சரிந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இருந்துள்ளது. ஆனால், நிவேதாவும், ரங்கநாதனும் சித்தியின் வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போதுதான் அந்தக் கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, இருவருக்கும் சிறிய வயது என்பதால் அவர்களது கண்களை தானமாக கொடுக்க முடியும் என மருத்துவர்கள் செல்வராஜிடம் எடுத்துச் சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து, இறந்து போன தனது மகன், மகள் ஆகிய இருவரின் 4 கண்களையும் செல்வராஜ் தானமாக வழங்கியுள்ளார். இவ்வளவு சோகமான நிலையிலும் செல்வராஜ் எடுத்த முடிவு அனைவரையும் நெகிழவைத்தது.