Tamilnadu

அமைச்சர் செங்கோட்டையனின் வெற்று அறிவிப்புகள் : என்னவாகின விளம்பரத்திற்காக அறிவித்த திட்டங்கள்?

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை கூறி வருகிறது.

ஆனால், அதற்கான பெரிய முயற்சிகளை எடுக்காததான் விளைவாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை. அதற்கு பெரும்பாலான பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும், எதனால் அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைகிறது என்று பார்த்தால், சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, போதுமான உபகரணங்கள் இல்லை என்று பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால், இந்த பிரச்சனைகள் குறித்து எதுவும் தெரியாதது போல், தினந்தோறும் புதிய புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து வருகிறார். சமீபகாலமாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்த பதிவுகளே அதிகம்.

குறிப்பாக கடந்த அக்டோபர் 23ம் தேதி ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டினை ஊக்கப்படுத்தும் விதமாக ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கபடி, வாலிபால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கான தளங்கள் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும்” என்றார். ஆனால் தற்போது டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டது; இன்னும் இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

அதேபோல், ஜூலை மாத்தில் பகிர்ந்துள்ள ஒரு ட்விட்டர் பதிவில், “பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. மூடப்போவதும் இல்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகள் நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். அங்கே ஒரு ஆசிரியர் இருப்பார். அங்கிருக்கும் மாணவர்களுக்கேற்ப அந்த ஆசிரியர் தொடர்ந்து பணியாற்றுவார்” என்றார்.

ஆனால் அதே மாதத்தில் தமிழகத்தில் 1,848 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயில்வதாகவும், அவற்றை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செங்கோட்டையன் தினமும் வெளியிடும் அறிவிப்புகளை செயலில் காட்டினால் நன்றாக இருக்கும் என்றும், அவரது அறிவிப்பு வெற்று விளம்பரம் தான் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.