Tamilnadu

ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் தேதி அறிவிப்பு : நகர்ப்பகுதிகளுக்கு எப்போது? - தொடரும் குழப்பம்!

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெளியிட்டார்.

அப்போது பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 6-ம் தேதி ஆரம்பம் ஆகும் என்றும் டிசம்பர் 16-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 13-ம் தேதி ஆகும். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இருகட்டங்களாக பதிவாகும் வாக்குகள் வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி எண்ணப்படும்” என்றும் இதனிடையே கிராம ஊராட்சிகளில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் ஜனவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.