Tamilnadu

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி - நடவடிக்கை கோரிய பொதுமக்கள் மீது போலிஸார் தடியடி!

வடகிழக்குப் பருவமழை வலுவாகப் பெய்துவரும் நிலையில் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி காலனியில் தடுப்புச் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் இன்று காலை நான்கு வீடுகளைச் சேர்ந்த 17 பேர் உடல் நசுங்கியும், மண் மூடியும் உயிரிழந்தனர்.

நடூர் ஏ.டி காலனி பகுதியில் துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களா உள்ளது. அதையொட்டி பெரிய தடுப்புச் சுவரை கட்டியுள்ளார் சிவசுப்பிரமணியன். சுவரை ஒட்டிய தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுவர் இடிந்துவிட்டால் ஆபத்து என சிவசுப்பிரமணியனிடமும், மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடமும் முன்பே எச்சரித்துள்ளனர்.

நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்ட சுவர் வீடுகளின் மேல் விழுந்து தரைமட்டமாக்கியது. இதனால் அதில் உறங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சுற்றுச்சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், அரசு மருத்துவமனை வளாகம் அருகே உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிஸார் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

ஆனால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலிஸாருக்கும், அங்கு கூடி இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலிஸார் தடியடி நடத்தினர்.

போலிஸார் கண்மூடித்தனமாக பொதுமக்களை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: #LIVE UPDATES | தமிழகத்தில் வெளுத்துவாங்கும் கனமழை : வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலி! - video