Tamilnadu

இடஒதுக்கீட்டை தவிர்க்கும் சென்னை ஐ.ஐ.டி: 2322 இடங்களில் 53 SC/ST மாணவர்களே சேர்க்கை - அதிர்ச்சி தகவல்!

சென்னை ஐஐடி-யில் முதுகலை படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் 2 வாரம் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சென்னை ஐ.ஐ.டியில் சாதி - மத பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மிகுந்த மன உலைச்சலுடன் படிப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களின் நலன்களை ஆய்வு செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் முடிவு எடுத்தது.

அதனடிப்படையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் சுவராஜ் வித்வான் நேற்றைய தினம் ஐ.ஐ.டிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். அங்குள்ள மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் பிரச்சனை குறித்து சுவராஜ் வித்வான் பேசியதாகவும் தெரிகிறது.

சுவராஜ் வித்வான்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுவராஜ் வித்வான், “நாடுமுழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளை விட ஐ.ஐ.டி மெட்ராஸில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக உள்ளது.

மேலும் கடந்த 2007 முதல் 2017-ம் ஆண்டு வரை இங்கு 17 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கான முழுமையான காரணமும் பெற்றோருக்கு தெரிவிக்கப்படவில்லை. ஐ.ஐ.டியில் இடஒதுக்கீட்டு முறை முழுமையாக பின்பற்றப்படவில்லை. குறிப்பாக 2,322 முதுநிலை அறிவியல் இடங்களில் வெறும் 47 எஸ்.சி மற்றும் 6 எஸ்.டி பிரிவு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட பிரிவினர் இன்றி, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களும் உடல்ரீதியாகவும், மனதளவில் கடும் துன்புறுத்தல்களை சென்னை ஐ.ஐ.டியில் சந்தித்து வருகின்றனர்.” என்ற அதிர்ச்சி தககவலை அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான அறிக்கை பிரதமர் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்ப உள்ளதாவும், இதுகுறித்து விளக்கம் அளிக்க சென்னை ஐ.ஐ.டி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் சுவராத் வித்வான் தெரிவித்தார்.