Tamilnadu

அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் கிடப்பில் இருக்கும் மதுரை எய்ம்ஸ் - மேலும் காலதாமதமாகும் கட்டுமானப் பணிகள்

மத்திய அரசின் 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் “எய்ம்ஸ் மருத்துவமனை” அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 1,264 கோடி மதிப்பீட்டில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டி 10 மாதங்களாகியும் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. கடந்த பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் திட்டத்திற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வப் பதிலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை ஜப்பான் அரசிடமிருந்து கடனாக வாங்கி மருத்துவமனை கட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டுமே ஜப்பானுடனான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு மேலும் ஓராண்டுக்கு மேல் காலதாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை மருத்துவமனைக்கு பின் அறிவிக்கப்பட்ட ஜம்மு மருத்துவமனைக்கு 48 கோடியும், காஷ்மீர் மருத்துவமனைக்கு 42 கோடியும் ஒதுக்கியுள்ள நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.