Tamilnadu

கொட்டி தீர்த்த கனமழை: தேர்வுகள் ஒத்திவைப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே தெரிவித்திருந்தது. அதனையடுத்து வங்கக் கடலில் மன்னார் வளைகுடா பகுதியை ஒட்டி உள்ள கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தனர். அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.