Tamilnadu

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்!

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவமழை காலகட்டங்களில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதகப் போக்கு காரணமாகவும், காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாகவும் தமிழகத்தின் திருவண்ணாமலை, கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வெப்பநிலை 23 - 29 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகும் வானிலை மையம் தகவலளித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரம் செய்யாறில் 14 செ.மீ, தஞ்சை மஞ்சளாறு பகுதியில் 9 செ.மீ, நாகையில் 8 செ.மீ மற்றும் சோழிங்கநல்லூரில் 5 செ.மீ மழை பொழிந்துள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.