Tamilnadu

டாக்டரிடம் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த செவிலியர்கள் : தஞ்சையில் இரட்டை சிசுக்கள் உயிரிழப்பு!

தஞ்சையை அடுத்துள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமாரவேலு. இவரின் மனைவி விஜயலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார். விஜயலட்சுமி தஞ்சை திலகர் திடலுக்கு எதிரில் உள்ள அபி & அபி தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ராதிகா ராணி என்பவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை விஜயலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராதிகா ராணி நேற்று இரவே சென்னைக்கு சொந்த வேலை காரணமாக சென்று விட்டார்.

இந்நிலையில், விஜயலட்சுமிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது. மருத்துவமனையில் வேறு மருத்துவர்களும் இல்லாததால் செவிலியர்களே மருத்துவர் ராதிகா ராணியிடம் செல்போனில் தொடர்புகொண்டு அவர் சொல்வதைக் கேட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது விஜயலட்சுமியின் பனிக்குடம் உடைந்துள்ளது. இதனால் வேறு ஒரு மருத்துவர் விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளிக்க வந்தார். விஜயலட்சுமியை பரிசோதனை செய்த அந்த மருத்துவர் இரட்டை பெண் குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர் விஜயலட்சுமியின் வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் உயிர் காப்பற்றப்பட்டது.

குழந்தைகள் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலிஸார் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.