Tamilnadu

“விஷவாயு தாக்கி மடியும் உயிர்கள்”; துப்புரவு பணியாளர்கள் இறப்பில் தமிழகம் முதலிடம்: - அதிர்ச்சி தகவல்!

மனித கழிவுகளை மனிதனே அள்ள தடை செய்யப்பட்டும்கூட இன்னும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த கொடுமையால் ஆண்டுதோறும் பல துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக துப்புரவுத் தொழிலாளிகள் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவுநீர் தொட்டிகளை துப்புரவு செய்யும்போது, அதில் இருந்து வெளியாகும் விஷவாயு தாக்கி மரணம் அடைகின்றனர்.

உரிய உபகரணங்களின்றி சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை, துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருவது சட்டப்படி குற்றமாகும். எந்திரங்களின் மூலம் தான் சாக்கடைகள் சுத்தப்படுத்த வேண்டும். 2013-மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

துப்புரவு தொழிலாளர்களை பாதுகாக்க சட்டம் உள்ள நிலையில், ஏன் மீண்டும் மீண்டும் எந்த ஒருபாதுகாப்பும் இன்றி, துப்புரவு பணியாளர்கள் இதுபோல விஷவாயு தாக்கி உயிரிழக்கிறார்கள் என்றார் அவர்களின் ஏழ்மை தான் காரணம்.

வறுமையின் காரணமாக சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசாங்க ஒழுங்கான பாதுகாப்புக் கவசத்தை கொடுப்பதில்லை என்பது வேதனைக்குறிய விசயம்.

இந்நிலையில், கடந்த 1993- ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியா முழுவதும் விஷவாயு தாக்கியும், மலக் குழியில் மண் சரிந்தும் பல்வேறு பாதிப்புகளினால் 620 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவரத்தை மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் அன்மையில் வெளியிட்டது.

மேலும், இதுதொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது அதிக உயிரிழப்பு நடந்த மாநிலங்களில் தமிழகம் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.

குறிப்பாக, உயிரிழந்த 620 பேரில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதேப்போல் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்தரபிரதேசத்தில் 71, ஹரியானாவில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் 88 பேர் இந்த பணியின் போது உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 15 மாநிலகளில் இருந்த தரவுகள் மட்டுமே, மீதமுள்ள மாநிலங்களும் இதுகுறித்து தெரிவித்தால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “சமீபத்தில் கூட சென்னையில் பிரபல மாலில் விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். துப்புரவுப் பணியாளர் மரணம் என்பது இனியும் நிகழக் கூடாது” என ஒவ்வொரு முறையும் இதுபோல மரணம் நிகழும் போது சொல்லிவிட்டு கடந்துப்போகிறோம்.

சமூக நீதிக்கும், மனித நேயத்துக்கும் சிறந்த மாநிலமாக இருக்கும் தமிழகம் துப்புரவு பணியாளர்களின் இறப்பில் முதலிடம் பிடித்திருப்பது அ.தி.மு.க அரசின் அவலநிலைக் காட்டுகிறது என சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளனர்.