Tamilnadu

கழிவு நீர் தொட்டியில் மயங்கிய தம்பியை காப்பாற்றச் சென்ற அண்ணன் பலி : நிர்க்கதியான 3 பெண் குழந்தைகள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபலமாலன தனியார் வணிக வளாகம் ஒன்றில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபானி என்பவர் மூலம், அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர். இதில் அருண்குமாரும், ரஞ்சித்குமாரும் சகோதர்கள் ஆவர்கள்.

இன்று அதிகாலையிலேயே 5 பேரும் வேலைக்குச் சென்றுள்ளனர். முதலில் இரண்டு கழிவு நீர் தொட்டிகளுக்குள் ஏணி வைத்து இறங்கி தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். இரண்டு தொட்டிகளை சுத்தம் செய்தபின்னர் 3-வது தொட்டியை உள்ளே இறங்காமல் சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால், மேற்பார்வையாளர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இந்த மூன்றாவது தொட்டியில் இறங்கமுடியாது எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனை மேற்பார்வையாளர் கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அவரின் வார்த்தைகளை மீறி வேலை செய்யமுடியாது என்பதால் அந்த தொட்டிக்குள் ரஞ்சித் இறங்கியுள்ளார்.

இறங்கிய சில நிமிடத்திலேயே ரஞ்சித்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன அண்ணன் அருண்குமார் தொட்டிக்குள் இறங்கி தம்பியை தூக்கி கொண்டுவர முயற்சித்துள்ளார். சக நண்பர்களும் தொட்டியில் இருந்து ரஞ்சித்தைத் தூக்க உதவி செய்தனர். ரஞ்சித்தை தூக்கும் போதே அருண்குமார் விசவாயு தாக்கி மயக்கம் அடைந்து உள்ளேயே விழுந்தார். பின்னர் மற்றவர்கள் சிரமப்பட்டு அருணை மீட்டுள்ளனர்.

அதன்பின்பு, உடனே போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்துவந்த போலிஸார் ரஞ்சித் மற்றும் அருண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர்களையும் மருத்துவர் பரிசோதித்தனர்.

இதில் ஆபத்தான நிலையில் ரஞ்சித் இருப்பதாகவும், அருண் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். பின்னர் அருண்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அருண்குமார் நண்பர் யுவராஜ் கூறுகையில், “கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மால் நிர்வாகம் எந்தவித உபகரணமும் வழங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த தொட்டிக்குள் ஒருஆள் மட்டுமே இறங்கும் அளவிற்கு இருந்தது.

அதனால் தான் ரஞ்சித்தை அனுப்பி வைத்தோம். சுத்தம் செய்துக்கொண்டு இருக்கும்போது வால்வு திறந்துள்ளது. அதனால் தான் விஷவாயு தொட்டி முழுவதும் பரவி அவனுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டது. அவனைக் காப்பாற்றச் சென்ற அவனது அண்ணனும் மயங்கிவிட்டான். இறந்த அருண் குமாருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. அந்த குழந்தைகளின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.