Tamilnadu

“டெல்லியைத் தொடர்ந்து காற்று மாசுபாடு அபாயத்தில் சென்னையும் சிக்கியுள்ளது” : சூழலியலாளர்கள் எச்சரிக்கை!

தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதல் வழக்‍கத்திற்கு மாறாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடும் புகைமூட்டத்துடன் காணப்பட்டுகிறது. இந்நிலையில் அந்தப்பகுதியில் காற்றின் தர அட்டவணை 625 என்ற அளவை எட்டியது. அதாவது 50 என்ற அளவு தரம் வாய்ந்ததாகவும், அதிகபட்சம் 200 என்ற அளவு மிதமானதாகவும் கருதப்படுகிறது.

ஆனால், டெல்லியில் தற்போது காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இத்தகைய பாதிப்புகளினால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை டெல்லிவாழ் மக்‍கள் சந்தித்துவருகின்றனர்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசுபாட்டின் தாக்கம் தமிழகத்திலும் இருக்கும் எனவும், குறிப்பாக சென்னையில் அதிக காற்று மாசுபாடு ஏற்படும் என முன்பே எச்சரித்தனர். அதுமட்டுமின்றி, சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது காற்றின் மாசு அதிகரித்துள்ளதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர்

இந்நிலையில், தீபாவளி காலகட்டத்தில் பெய்த மழையின் காரணமாக காற்று மாசுபாடு தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது மழை இல்லாமல் சென்னைப் பகுதியில் வறட்சி நிலவுவதால் சென்னை நகரத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதில், சென்னையில் நேற்றையதினம் நிலவரப்படி, காற்றின் தரக்குறியீடு மணலியில் 290, கொடுங்கையூரில் 319, அண்ணாநகரில் 301, ஆலந்தூரில் 218, வேளச்சேரியில் 252, அமெரிக்க தூதரகத்தில் 165 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த காற்று மாசுபாட்டை மூடுபனி என பலர் தவறாகக் கருதுகின்றனர்; ஆனால் அது உண்மையல்ல, காற்று மாசுபாடு அபாயத்தில் சென்னையும் சிக்கியுள்ளது என சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.