Tamilnadu
“கடைசிவரை மகனின் சடலத்தை எங்களுக்கு காட்டாமல் ஏமாற்றிவிட்டார்கள்” : சிறுவன் சுஜித்தின் தந்தை வேதனை!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் முயன்றனர். ஆனாலும் சுஜித்தை மீட்க முடியவில்லை. 5 நாள் மீட்புப் போராட்டத்தை அடுத்து ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மீட்புப் பணிக் குழுவினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவன் சுஜித் உயிரிழந்ததாக பெற்றோரிடம் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட சுஜித்தின் பெற்றோர் கதறித் துடித்து தனது மகனின் உடலை எப்படியாவது மீட்டுக்கொடுங்கள் என அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் கெஞ்சியுள்ளனர். அதனையடுத்து சுஜித்தின் பெற்றோரையும், பத்திரிகையாளர்களையும் அதிகாரிகள் அங்கியிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதேசமயத்தில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்டதாகக் கூறி, பெரிய நீல நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அங்கு ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த சவப்பட்டியில் வைத்து உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மாவட்டம் பாத்திமா புதூர் கல்லறையில் காலை 8 மணியளவில் குழந்தை சுஜித் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில், குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றில் கான்கிரிட் பூசப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, சிறுவனின் பெற்றொர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. பலரும் சுஜித் உடல் மீட்கப்படவில்லை, உடலை மீட்கமுடியாத அரசு குழியிலேயே புதைத்து மூடிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து சுஜித்தின் தாய் கலாமேரி கூறுகையில், “சுஜித்துக்கு 30ம் நாள் காரியம் முடிந்த பிறகு அந்த இடத்தில் சிலுவை நட்டு நினைவு ஆலயம் கட்ட முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரது தந்தை கூறுகையில், “சுஜித் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பான். சுஜித் விழுந்த பிறகு 29ம் தேதி அதிகாலை அவனது உடலை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். அப்போது எங்களை சுஜித் உடலைப் பார்க்கவிடவில்லை, சுஜித்தின் உடல் நீங்கள் பார்க்கும் நிலையில் இல்லை. எனவே நீங்கள் இருக்க வேண்டாம்” எனத் தெரிவித்தனர்” என்றார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் கேட்காதீர்கள் எனக் கலங்கினார். மருத்துவமனையில் உங்கள் மகனின் உடலை பார்த்தீர்களா எனக் கேட்டபோது, “இல்லை.. கடைசிவரை மகனின் சடலத்தை எங்களுக்கு காட்டாமல் அதிகாரிகள் ஏமாற்றிவிட்டார்கள்” என கண்ணீரோடு பதில் அளித்தார்.
மேலும், “எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் மோட்டார் விழுந்துவிட்டால் சந்தியாகு என்பவரைத்தான் அழைத்து மீட்போம். அவரை அழைத்து குழந்தையை மீட்டிருக்கலாம் என்றபோது மீட்பு குழுவினரிடம் கூறியும் அவரை அனுமதிக்கவில்லை” என்றார்.
சிறுவன் சுஜித்தின் உடலை கல்லறையில் புதைப்பதற்குள் குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு மற்றும் பக்கவாட்டில் தோண்டிய குழிகளை உடனடியாக கான்கிரீட் கலவை கொண்டு மூடியது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சிறுவனின் தாயார் கலாமேரியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க வரும் செவிலியர்கள் மற்றும் வீட்டிற்கு வந்து செல்வோர் குறித்த விவரங்களையும், வாகனப் பதிவு எண்களையும் பதிவு செய்யவும் போலிஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!