Tamilnadu

சுர்ஜித் இறப்பின் சுவடு மறைவதற்குள் இன்னொரு சோகம்... தண்ணீர் ட்ரம்மிற்குள் தவறி விழுந்த குழந்தை பலி!

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் எனும் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, நான்கு நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சுர்ஜித்துக்காக நாடே கலங்கியதன் சுவடு மறைவதற்குள் தூத்துக்குடியின் ஒரு சிறுமி, பெற்றோரின் கவனக்குறைவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதி. இவர்களுக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது மகள் இருக்கிறார். மீனவரான லிங்கேஷ்வரனும், அவரது மனைவியும் நேற்று மாலை வீட்டில், நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பான நேரலை செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தங்களது குழந்தை ரேவதி சஞ்சனா காணாமல் போகவே, வீடு முழுவதும் அழைத்துப் பார்த்த இருவரும் பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். எங்கும் கிடைக்காத நிலையில் பதறிப்போன பெற்றோர் தங்கள் வீட்டின் பாத்ரூமை திறந்து பார்த்துள்ளனர்.

பாத்ரூமில் இருந்த சிறிய தண்ணீர் ட்ரம்மிற்குள் தண்ணீரை எடுக்க முயற்சித்த குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கேனுக்குள் கவிழ்ந்து மூச்சுத் திணறி மூழ்கிக் கிடந்துள்ளது.

இதையடுத்து, குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் பலியான சுவடு மறைவதற்குள் தண்ணீர் ட்ரம்மிற்குள் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.