Tamilnadu

“பொக்லைன் பயன்படுத்தியதாலேயே சிறுவன் ஆழத்துக்கு சென்றுவிட்டான்” - சுஜித்தை மீட்க வந்த மாணவர் தகவல்!

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 25ம் தேதி தவறுதலாக விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 5 வது நாளாக தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் இன்று (அக்.,29) அதிகாலை அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டது. உடற்கூறாய்வுக்கு பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுர்ஜித்தின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் குழுவில் மாதேஷ் என்ற 9ம் வகுப்பு படிக்கும் மாணவனும் தொடர்ந்து பணியாற்றியுள்ளான். மீட்புப் பணிகள் குறித்து பேசியுள்ள மாதேஷ், “போர்வெல் பணிக்காக நாங்கள் ஏற்கெனவே வைத்திருந்த கருவிகள் இருந்திருந்தால் எப்போதோ குழந்தையை குழிக்குள் இருந்து தூக்கியிருப்போம்.”

“ரப்பரை வைத்து குழந்தையின் கையை அழுத்தமாக பிடித்து அசைத்தவாறே மேலே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வேறு வாகனத்தில் வந்ததால் கருவிகள் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றார். மேலும், பொக்லைன் வைத்து பள்ளம் தோண்டியபோது குழந்தையிடம் அசைவு தென்பட்டது. அப்போது அப்பா, அம்மா என பேச்சுக் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான்.”

“அந்த சமயத்தில் பொக்லைன் பயன்படுத்த வேண்டாம் என கூறினோம். ஆனால் பொக்லைன் உபயோகித்ததால் நிலத்தில் அசைவு ஏற்பட்டதும் குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றுவிட்டான். அப்போது சுர்ஜித்தின் முனகல் சத்தம் எந்த மைக்கும் இல்லாமல் கேட்டது” என மாதேஷ் கூறியுள்ளார்.