Tamilnadu

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்றும் கருவி கண்டுபிடிப்போருக்கு 5 லட்சம் பரிசு : தமிழக அரசு

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் 5 நாள் மீட்பு போராட்டத்தை அடுத்து அழுகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். அதனையடுத்து, உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமா புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை லாவகமாக மீட்க பிரத்யேக கருவி ஏதும் இல்லாததால் சுர்ஜித் மரணமடைய நேர்ந்தது.

இந்நிலையில் தமிழக தகவல் தொழில் நுட்ப முதன்மை செயலர் சந்தோஷ் பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘இந்த தீபாவளி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சோகமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் இதுவே கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும். இதனை தடுக்க நமக்கு தீர்வு தேவைப்படுகிறது. தற்போது அப்படி ஒன்று இல்லாததால் வருத்தப்படுகிறோம். ஆனால் இன்னும் தாமதிக்கக் கூடாது.

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும் கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். தனி நபர் அல்லது நிறுவனம் யார் உதவினாலும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.