Tamilnadu

செயல்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கியதை அடுத்து வேலூரில் உள்ள செயல்படாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

ஏறக்குறைய 17 மணிநேரத்திற்கும் மேலாக 70 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் சிக்கிக்கொண்டுள்ளார்.

சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவர்கள் குழு செயல்பட்டு வருகிறது. சிறுவன் சுஜித்தை மீட்டெடுப்பதற்காக நாடு முழுவதிலிருந்து மக்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வேண்டி வருகின்றனர்.

அதே சமயம் குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜனை செலுத்தும் பணி மிகுந்த சவாலாக உள்ளது என மருத்துவர்கள் தரப்பும் தெரிவித்து வருவது அப்பகுதியினரிடயே மிகுந்த பரபரப்பையும், மனதளவில் பதபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வேலூர் மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றின் நிலை குறித்து ஆராய்ந்து உடனடியாக மூட வேண்டும் என நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், கிணறுகள் அனைத்தும் முறையாக மூடப்பட்டுள்ளதா என்பதை வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.