Tamilnadu

'பிகில்’ படத்துக்கு இலவச டிக்கெட் : தர்மசங்கடத்துக்கு ஆளான விஜய் ரசிகர்கள் - வசூல் பாதிக்குமா ?

விஜய் நடிப்பில் அவரது 63வது படமாக உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது 'பிகில்'. அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார்.

நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வருகிற 25ம் தேதி பிகில் படம் வெளியாகவுள்ள சமயத்தில் படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படம் நல்ல முறையில் வெற்றி அடைய வேண்டும் என விஜய் ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

கடந்தாண்டு வெளியான ‘சர்கார்’ படத்தின் போது திரையில் இலவசங்களுக்கு எதிரான விஜய்யின் வசனங்களால், விஜய் ரசிகர்கள் அவர்களின் வீட்டில் அரசு வழங்கிய இலவசங்களை வீதியில் எறிந்தும், தீயிட்டு எரித்தும் ‘ஒரு விரல் புரட்சி’ செய்தார்கள்.

பின்னர், விஜய் ரசிகர்கள் இலவசங்களை எதிர்ப்பதாகவும், அரசின் இலவசப் பொருள்களை வாங்கமாட்டோம் எனவும் கூறிவந்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெளியாக உள்ள பிகில் படத்திற்கு திரையரங்களில் ஒரு டிக்கெட் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில உள்ளூர் கடைகள் தீபாவளி விற்பனையோடு டிக்கெட்டையும் ‘பிகில்’ விற்கத் தொடங்கியுள்ளனர். ஒரு ஜவுளிக்கடையில் ரூபாய் 1500-க்கு துணி வாங்கினால் ‘பிகில்’ டிக்கெட் இலவசம் என்றும், 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் 2 டிக்கெட் இலவசம் எனவும் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த கடைகளில் வழங்கும் இலவச டிக்கெட்டை இலவசத்துக்கு எதிரான விஜய் ரசிகர்கள் பெற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த டிக்கெட்டால் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. குறிப்பாக சிறப்பு காட்சிகள் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் திரையரங்குகளில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு டிக்கெட்டின் விலையை 300 ரூபாய்க்கு மேலும் விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் என ரசிகர்கள் நொந்துகொண்டுள்ளனர்.