Tamilnadu

“போராடும் மருத்துவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” : அரசுக்கு முத்தரசன் கோரிக்கை!

அரசு மருத்துவர்கள் வரும் அக்டோபர் 25 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை முன்பே தலையிட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பருவ மழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பொது மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மழைக் காலங்களில் நோய்களால் மக்கள் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையே மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு இதனை விட்டால், வேறு வழியில்லை. இத்தகைய நிலையில் மருத்துவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை தொடராமல் ஒத்தி வைத்தனர்.

அமைச்சர் அளித்திட்ட வாக்குறுதிப்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் மீண்டும் போராட்ட களத்திற்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொது மக்கள் மற்றும் மருத்துவர்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாது அமைச்சர் அளித்திட்டபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும்.

அதற்கு மாறாக போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அச்சுறுத்துவது பயன் அளிக்காது என்பதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.