Tamilnadu

சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் : ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 176 சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணம் கடந்த செப்.,9ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது. அதில், 2016ம் ஆண்டு செப்.,9ம் தேதிக்கு முன்பு சட்டப்படிப்புக்கான பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், நவ.,24ம் தேதி சிவில் நீதிபதி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பாணையின்படி சிவில் நீதிபதி தேர்வுக்கான விண்ணப்பங்களில் முறைகேடு நடப்பதாக பத்மாவதி, லட்சுமி, சண்முக பிரியா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், 2016 செப்.,9க்கு முன் பட்டம் பெற்றவர்களான தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், 2016 செப்.,9க்கு பின் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது பாரபட்சமான செயல் சென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, 2016ம் ஆண்டு செப்.,9க்கு முன் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள் வருகிற 25ம் தேதி இரவு 11.59 வரை சிவில் நீதிபதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏதுவாக வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த உத்தரவு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி மற்றும் உயர்நீதிமன்ற இணையதளங்களிலும் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.