Tamilnadu

இன்னும் 2 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் வானிலை மைய இயக்குநர் புவியரசன்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

குமரிக்கடல் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 இரண்டு நாட்களுக்கு மிதமான மழையே தொடரும். மேலும், குமரி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் 9 செ.மீ. நாகர்கோவிலில் 8 செ.மீ மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.