Tamilnadu

பேனர் விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி மேல்முறையீடு!

சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பிரமுகரின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து நடந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க சார்பில் பேனர் வைக்கமாட்டோம் என நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், பிரதமர் மோடியையும் வரவேற்க பேனர் வைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. விதிகளுக்கு உட்பட்டு பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''சென்னை உயர்நீதிமன்றம் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை உருவாக்கும், வாகன ஓட்டிகளை திசைதிருப்பும், விபத்துக்களால் உயிரிழப்பும் ஏற்படுகின்ற இந்த பேனர்களை சாலைகளில் வைப்பதற்கு முற்றிலுமாக உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தனிநபர் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.

ஆனால் அரசுக்கு இந்த தடை பொருந்தாது என்ற வகையில் அரசு, சாலைகளில் பேனர் வைப்பதற்கு அனுமதி கோர தேவையில்லை என்ற விதமாக, இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் அரசியல் கட்சிக்கு பேனர் வைப்பதற்கு தடை பொருந்தும்போது, அதே தடை அரசுக்கு அதிக அளவில் பொருந்தும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பண்டைய காலத்தில் அசோக சக்கரவர்த்தி சாலைகளில் மரங்களை நட்டார். அன்றைய சூழலில் அறிவியல் வளர்ச்சி, தொலைத்தொடர்பு, விஞ்ஞானம் போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் விளம்பரத்திற்காக சாலைகளில் பேனர் போன்ற உபகரணங்களை பயன்படுத்தவில்லை.

ஆனால் இன்றைய காலத்தில் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில், தனிநபர், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு, விளம்பரத்திற்காக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் பேராபத்தை விளைவிக்கிற ராட்சத பேனர்களை வைத்து வாகன ஓட்டிகளை திசைதிருப்பி, விபத்துகளை உருவாக்கி, அப்பாவி பொதுமக்களை கொல்லும் இந்த பேராபத்து பேனர்களை முற்றிலுமாக சாலையிலிருந்து அகற்றவேண்டும். அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.