Tamilnadu

தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வடகிழக்குப் பருவமழை : 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்துள்ள நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீ மழை மற்றும் பாம்பனில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், “தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழக கடற்கரையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கனமழையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனக் கூறினார்.

மேலும் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இரு தினங்களுக்கு இடைவெளி விட்டு மிதமான மழை தொடரும். குமரிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு 17 மற்றும் 18 தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4 தினங்களுக்கு முன்பாக துவங்கி உள்ளது எனவும், இந்த காலகட்டத்தில் சராசரியாக மழைப் பொழிவு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.